Monday, 22 February 2016

ஒரு கனவு கண்டால், அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும் ....( இனியொரு விதி செய்வோம் --- அத்தியாயம் - 004 )

ஒரு குழந்தை இருக்குது.... ஓடி, ஆடி விளையாடுது..! சரி , விளையாட்டுப் பிள்ளை... விளையாடட்டும் ! ஒரு ஓரமா அவங்க அப்பா , தொந்தரவு செய்யாம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பாரு. ஏதாவது ஒரு பிரச்னை, தடுமாற்றம் வந்தா ஓடி வந்து தாங்கிப் பிடிக்க தயாராக....!

இந்த கட்டுரையின் முந்தைய அத்தியாயம் படிக்க  :

யா...ஹூ ! அது என்ன அந்த வெற்றி மந்திரம்...! இனியொரு விதி செய்வோம்..! ( பாகம் - 003)

சில சமயம், கீழே விழுந்து அடி பட்டு, அழுதுக்கிட்டே இருக்குது. என்ன பண்ணனும்..? மருந்து போடணும்...? போட்டால், இன்னும் காயம் எரியும்...! அதுக்காக போடாமலும் விட முடியாது...!

போடுறோம்... டிஞ்சர் பட்ட எரிச்சல்ல, அந்த குழந்தை அப்பாவை அடிக்க கூட செய்யும்...! ஏற்கனவே ரத்தம் வருது, அந்த வலி போதாதுன்னு - இது வேற...! யே ய்... அப்பா.... ன்னு பல்லை நற நறன்னு கடிக்கும்...! அப்பா விட முடியுமா...? காயத்தை நல்லா கழுவி , மருந்து கட்டி - குழந்தைக்கு நெஞ்சோட அணைச்சு - ஒரு முத்தம் கொடுத்து , இனிமே பார்த்து விளையாடு கண்ணுன்னு சொல்லி அனுப்புறாரு...!

ஐயோ .. என் குழந்தைக்கு அடி பட்டிடுச்ச்சேன்னு -  உள்ளுக்குள்ளே கலங்காம எந்த அப்பாவும் இருக்க முடியுமா...? இல்லை மருந்து தடவும்போது - படுற வேதனை - ஏ சி காத்து மாதிரி குளு குளு ன்னு இருக்குமா...? எல்லாம் முடிஞ்சு - அக்கடான்னு , கொஞ்சம் ஏ சிஆன் செஞ்சுட்டு - கண்ணை மூடி, ஓய்வு எடுக்கிறாரு அப்பா...! அது ஓய்வு  கூட இல்லை...!

 சரி, நம்ம புள்ளைக்கு ஒரு தகப்பனா என்ன செய்யனும்...?  நாலு பேர் மதிக்கிற மாதிரி வரலைன்னா கூட பரவா இல்லை... ஆனா, அசிங்கம் -அவமானம்னு , நம்ம கண்ணு முன்னே அந்த புள்ளை - கூனி குறுகி வந்து நிக்க விட்டுடக் கூடாது..!  இப்பக் கூட பாருங்க, அவன் அந்த மாதிரி ஆகிடக் கூடாது... அதுக்கு என்ன செய்யலாம்னு தான் யோசனை...! பெருசா சொத்து சேர்க்கலையா பரவா இல்லை... ஆனா, கடன் சுமைன்னு புள்ளை தோள் மேலே வந்துடக்கூடாது...!

இதே - குழந்தை கொஞ்சம் பெரிய பையனாகி - முரட்டு விளையாட்டு விளையாடி - கை கால் முறிச்சும் வரலாம்...அதுக்கு என்ன பண்ண முடியும்..? மகனே உன் சமத்து..! காலம் முழுக்க பாத்துக்கிட்டேவா இருக்க முடியும்? உன் வாழ்க்கை - உன் ஆட்டம் நீதான் கண்ணு பார்த்துக்கணும்..!

ஒரு சாதாரண அப்பாவுக்கே - இப்படின்னா...!

இந்த உலகத்தையே படைச்ச அந்த தகப்பன்...! எவ்வளவு கவனமா பார்க்க வேண்டி இருக்கும்? எத்தனை ..குழந்தைகள்.! எத்தனை விளையாட்டு..! எவ்வளவு பரிதவிப்பு , வலிகள்... ! எல்லாத்துக்கும் மருந்து தடவி... வேதனையை தன்னோட நெஞ்சுல ஏந்திக்கிட்டு...!

அடடா... இப்போதானே தெரியுது... ஏன் அந்த கைலாசம் முழுக்க பனி மலையா உறைஞ்சு கிடக்குதுன்னு ....! அண்ணாமலை முழுக்க அக்னியா  கொதிக்குதுன்னு...! எங்க கஷ்டம் தாங்கி தாங்கி - உங்க நெஞ்சு கொதிக்குதோ...!

 இறைவா...! இறைவா......! என்னே உன் கருணையப்பா...!ரெங்கா .... ! பரந்தாமா... உறங்கியும் , உறங்காமலும் நீங்க தவிக்கிற தவிப்பு...! இது தெரியாம, கண்ணை மூடிக்கிட்டே இருந்துக்கிட்டு - எங்களை கஷ்டப்பட விட்டுட்டீங்களோன்னு நெனைச்சேன்...! இல்லை... ! எத்தனை தடவை தூக்கி விட்டு இருக்கிறீங்க...!  (திரும்ப திரும்ப பேசுறே நீ..!)

நன்றி , என் தந்தையே...! எனக்கு சக்தி கொடு..! விளையாட்டுல ஜெயிக்கிற அளவுக்கு என் திறமை வளர்த்துக்கொள்ள எனக்கு வாய்ப்பு கொடு..! (இப்போ... நிறையா காசு கொடு......)

ஏதாவது ஒரு சின்ன தடுமாற்றம்னா, தாங்கிக் கொள்ள நீ இருக்கிறேங்கிற நெனைப்பு போதும் எனக்கு...! நன்றி... கருணைக் கடலே...!

இவ்வளவு நாள்.....நான் நல்லா விளையாடினாலும், இதுக்கு மேலே இன்னும் பெட்டரா வெளையாடனும்...! விளையாடுவேன்...! என்னை நம்பு..! ஆசீர்வாதம் செஞ்சு அனுப்பு...!

என் பையன் சாமிக்கிட்ட , கொஞ்ச நாள் முன்னே வரைக்கும் - தினமும் நிறைய பாட்டரி வேணும், ஸ்கூல்ல  நெறைய ஹாலிடேஸ் விடனும்னு  சீரியஸா வேண்டிக்கிட்டான்  ...! பாட்டரி பொம்மையில் போட்டு விளையாட...! அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க தேவை..!  ) 

பாட்டரி நிறைய கிடைச்சது...! பொம்மையும் தான்...! லீவும் நெறைய .... மழை நேரத்துல ....!  சாமி, இங்க பாரு - எங்க அப்பா சொல்லிருக்காரு, என்ன வேணும்னாலும் சாமிக் கிட்ட கேளு ,கொடுப்பாருன்னு .... சீக்கிரம் எனக்கு கொடுத்திடு...... இந்த மாதிரி அப்பழுக்கில்லாத நம்பிக்கை வேணுமோ..? 


இறைவன் நமது நியாயமான கோரிக்கைகளுக்கு , மனமுருகி அவரை வேண்டி நிற்கும்போது  - மூன்றே மூன்று பதில்கள் தான் வைச்சு இருக்கிறார்...!

1)  YES .......... ( இந்தா, வைச்சுக்கோ...!)
2) NOT YET .........( இன்னும் இல்லை .... கொஞ்சம் பொறு..!)
3) I HAVE SOMETHING BETTER IN MIND ..... (  உனக்கு இன்னும் பெட்டரா தரலாம்னு இருக்கிறேன்...!)

அவ்வளவுதான்... சிம்பிள்...! எதுக்கு நம்ம மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு...! என்னோட கஷ்டம்  கண்ணுக்குப் படலையா, ஆச்சா.. போச்சான்னு அழுது, புலம்பிக்கிட்டு ...!

தகப்பன் ஒரு குழந்தையை - தன்னை காக்க வந்த சாமின்னு நெனைச்சு , நல்ல படியா, கவனமா  வளர்க்கிறான்...! தாய் - தான் தான் அந்த குழந்தைக்கு சாமின்னு நெனைச்சு . அழுதா, அணைச்சு - பால் கொடுத்து, நேரத்துக்கு மருந்து கொடுத்து வளர்க்கிறாள்...! அப்போ - ஒவ்வொருத்தருக்கும் கட்டின மனைவி தெய்வத்தின் தெய்வம்..... அடேங்கப்பா... இதுநாள் வரைக்கும் இதை யோசிக்கவே இல்லையே....! ,என்னமோ  சுதந்திரமா சுத்திக்கிட்டு இருந்த கிளியை , கூட்டுல அடைச்சு - நெல்லு போடுற ஆளுன்னு நினைச்சிட்டேனே...! ச்சே ...!  

( தம்பி ..! சாருக்கு நாலு முழம் மல்லிப்பூ  பார்சல்.....!)

சரி, மேட்டருக்கு வர்றேன்...!

ஸ்வாமி விவேகானந்தர் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்.

கடவுளை கும்புடுறதுனால உங்களுக்கு என்னமாச்சும் கிடைச்சு இருக்குதா சுவாமிஜின்னு , என்ன மாதிரி ஒருத்தர் கோக்கு மாக்கா கேள்வி கேட்டாராம்..!
"தம்பி - நீங்க வேற, ஒண்ணுமே கெடைக்கலை,....! ஏன்... இதுனால இழந்தது தான் அதிகம்..! அதுல பாருங்க...! யாராச்சும் கடுப்பேத்துனா சுள்ளுன்னு பயங்கரமா வர்ற கோபம் போச்சு..! பாதுகாப்பே இல்லாம இருக்கிற மாதிரி இருந்த பயம் போச்சு..! பொறாமை போச்சு...! விரக்தி , மனச்சோர்வு எல்லாம் போயே போச்...!

 நல்ல வேளை சுவாமிஜி .... இல்லைனா நான் உங்களை இந்த கேள்வி கேட்டு கடுப்பேத்துனதுக்கு என்னை அடிச்சு இருப்பீகளோ...?

இதோ முந்தாநாள் , பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த நாள்...! காளி கோயில்ல பூசாரியா இருந்தவர்... விவேகானந்தருக்கு குரு. சாமியை யாராச்சும் பார்த்து இருக்கிறீங்கன்னு அவர் தேடினப்போ - "ஆமா, ஏன் உனக்கும் காட்டுறேன் வாய்யா"ன்னு ... அன்னையை தரிசனம் செய்ய வைத்தவர்...!"

ஏங்க , இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குதுன்னு - நம்ம போன பதிவு மாதிரி யோசிச்சால்.... அதே சந்தானம் மாதிரி பதில் தான்..! கிண்டலுக்கு சொல்லலை, சீரியசாவே சொல்றேன்...! நிஜமாவே அவங்க போட்ட சாப்பாட்டை சாப்பிட்டு வளர்ந்தவன் சார்... நான்..!

எல்லோருக்கும் குரு மகராஜ் ... ஆனா எனக்கு பகவான் ....!
நான் ராமகிருஷ்ண மிஷன் ஹோம்ல படிச்ச மாணவன். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்னு நினைக்கிறேன்...நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப் , படிச்ச உடனே காம்பஸ் இண்டர்வியூல செலெக்ஷன் ... அதே அதே..! என்னை மாதிரி எத்தனையோ ஏழை , அநாதை குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்த கோவில் எங்க ஹோம்..! ஹாஸ்டல்னு சொல்ல மாட்டோம்..! எங்க ஹோம்..! .

அது என்ன - ஏழை , அநாதை..? ஏழைன்னாலே அநாதைதானே..!

ஏழைன்னா - நல்ல மனசு இல்லாதவன் தானப்பா ஏழை..! காசு, பணத்திலே என்ன இருக்கு...?

அண்ணே.. எங்க ஊர்லே காசு இல்லாதவங்க தான் ஏழை...! உங்க ஊர்லே எப்படியோ..?

ஒருமுறை மெயின் மடத்துல ஏதோ விசேஷம் ! நூற்றாண்டு விழா! நெறைய பேருக்கு பிரசாதம் செஞ்சு - பக்தர்கள் அதிகம் வராமல், மீதம் ஆன சாம்பார் சாதம் எல்லாம் - ஹோமுக்கு கொண்டு வந்தாங்க..! இங்கே தான் பசங்க நிறைய பேர் இருக்கிறோமே..! முதல் வேளை சாப்பிட்டோம்... ! காலி ஆகலை..! வக்கணையா சாப்பிட்டு - நாக்கு ருசி தேடிப் போச்சு எல்லோருக்கும்..! நெறைய மீதம் இருந்தது. இரண்டாவது வேளை .. ஹ்ம்ம் இன்னும் கம்மியாதான் உள்ளே போகுது..! மூணாவது வேளை , நெறைய பசங்க சாப்பிடவே வரலை...! ரெண்டாவது நாள்... மூன்றாவது நாள்.... அதுவே...!

என்னை மாதிரி ஒரு சில பேர் , ரெண்டு நாள் பட்டினி இருந்தவங்க, ஒரு நாள் பட்டினி இருந்தவங்க... இந்த மாதிரி..!  சாயந்தரம் கிரவுன்ட்லே விளையாட பசங்களே வரலை...!

"நீ எப்படிடா , சாப்பாட்டை குறை சொல்லாம சாப்பிடுறே...?"
" ஹா.. ஹா..! இதுக்கு என்னடா ,  நல்லாத்தானே இருக்கு...! "
"ஆமா..... இவரு பெரிய ஞானி..! "

மூன்றாவது நாள் நைட் - வார்டன் சுவாமிஜி  - எல்லாரையும் மீட்டிங்க்கு கூப்பிட்டு விட்டாரு ... "தம்பிகளா,,, இந்த சாப்பாடு மடத்துலே இருந்து வந்து இருக்கு.. ! மீதம் ஆன சாப்பாடு - கடல்லே கொட்ட முடியாது. கோல்ட் ஸ்டோரேஜ் ரூம்ல வைச்சது . இன்னும் கெட்டுப் போகலை...! இன்னும் எத்தனை நாள் ஆனாலும், இது காலி ஆகாமல் , வேற சாப்பாடு பண்ண மாட்டோம்..! எல்லோரும் நாளைக்கு ஒழுங்கா சாப்பிட வாங்க...! நம்ம பசங்கன்னு நம்பி - "மட்"ல இருந்து அனுப்பிச்சு இருங்காங்க.  நாம வீணடிக்க கூடாது . அவ்வளவுதான்..! "

வேற வழி---- அடுத்த நாள் காலையில் அவன் அவனுக்கும் இருந்த பசி வெறி......

ருசியா...! அப்படின்னா...?

அப்போவே உப்புமா இன்னும் செய்ய வேண்டிய நிலைமை..! இதுக்கு முதல் நாளே சாப்பிட்டு இருந்தால்..? ( இருந்தால்.... இப்போ, இத்தனை வருஷம் கழிச்சு அதை இங்கே ஞாபகத்துக்கு கொண்டு வர்றோமே , அது நடந்து இருக்காது இல்லே..?)

சாப்பாடுன்னு சொன்னதும் - இன்னொரு விஷயம் உங்களுக்கு சொல்லணுமே ..!

கிராமத்துக்கு பக்கம் பார்த்தீங்கன்னா - கண்மாய் இருக்கும். எப்போவுமே , மழை, தண்ணி  இல்லாத நாட்கள் - கருவேல மரமா தெரியும்...! பார்த்து இருப்பீங்க இல்லையா...  நாம என்ன எல்லோரும் கலெக்டர் வீட்டு புள்ளைகளா என்ன...? ஆமா, பார்த்து இருக்கோம்...! வெயில் கொதிக்க , கொதிக்க - கருவேலை மரம் மட்டும் தான் பச்சையாவே இருக்கும்...!

அதுலேயும் ராமநாதபுரம், விருதுநகர் எல்லாம் - அதுவே காய்ஞ்சு போய் தான் இருக்கும். அங்கே எப்போவாவது  - அஞ்சாறு வயசான பாட்டிங்க , இல்லை கொஞ்சம் நடுத்தர வயசு பொம்பளைங்க - காலையிலேயே ஒரு தூக்கு சட்டியில் சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க..! பக்கத்துலே அந்த கருவேல மரத்துலே இருந்து - ஒரு கம்பு , அரிவாள் வைச்சு அடிச்சு, அடிச்சு - முள்ளை ஒடிச்சு - ஒரு முள்ளுக்கட்டு ரெடி பண்ணுவாங்க ...  ஏழு அடி நீளம் - ரெண்டு அடி அகலம் இருக்கும்... !

முள்ளு  வெட்டப் போற கண்மாய்க்கு பத்து, இருபது கிலோ மீட்டர் தூரம் எல்லாம் நடந்து போக வேண்டி இருக்கும்..! காலையில் நாலு , நாலரை மணிக்கு எல்லாம் எழுந்து போனால் தான் ஆச்சு...! வெளிச்சம் வரும்போதே வேலையை ஆரம்பிக்கணும்...... அப்போ தான் வெயில் ஏறி வர்றதுக்குள்ளே - வீட்டுக்கு வர முடியும்...! கிழிச்ச சேலை, ஒரு முரட்டு துண்டு எல்லாம் சேர்த்து - தலையில் ஒரு சும்மாடு கட்டி அதுக்கு மேலே , முள்ளு கட்டை வைச்சுக்கிட்டு , கையிலே அதை தாங்கிக்கிட்டே வரணும்...!

அப்பா, ஏன் அந்த ஆண்ட்டி ..கைக்கு கிளவுஸ் மாட்டிக்க வேண்டியதுதானே.....! சமீபத்தில் ஒருநாள் என் பையனுக்கு , இதே மாதிரி , ஒரு பெண்மணி  முள்ளுக்கட்டு தூக்கிச் சென்றதை காட்டிய போது  - அவன் சொன்னது...!

கால்ல ஒரு டயர் செருப்பு... அங்கங்கே ஊக்கு குத்தி குத்தி - நடந்தா பாதமே தடம் பதியும் பூமியிலே...!

கருவேல முள்ளு மாதிரி - இன்னொன்னு விஷ முள்ளுன்னும் இருக்கு... கால்லே ஒரு முள்ளு குத்திச்சின்னா - கள்ளிப்பால் தினம் வைச்சாலும், ஒழுங்கா கால் ஊன்றி நடக்க ஒரு வாரம் ஆகும்...!

முள்ளுக்கட்டு அப்போ எல்லாம்  ரெண்டு , மூன்று  ரூபாய்...! நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது - ஒன்பது, பத்து ரூபாய்....! அதே அளவு விறகு கட்டு வாங்கணும்னா அறுபது , எழுபது ரூபாய் ஆகும். வீட்டுல காசு கம்மியா இருக்கிறவங்க.... இல்லை வெந்நீர் வைக்க இந்த முள்ளுக் கட்டு தான்...! இப்போ தான் எல்லாம் காஸ் அடுப்பு வந்திடுச்சே...! நான் சொல்றது 1980-90 களில் ...!

அந்த முள்ளு - அவங்க வீட்டுக்கு எரிக்க இல்லை...! அதை வித்து, அதுல வர்ற காசுல தான் - வீட்டுக்கு பருப்பு , புளி , சாம்பார் எல்லாம்..! அந்த வீட்டு அப்பா சம்பாதிக்கிறது - அரிசிக்கு ... ! அம்மா சம்பாதிக்கிறது மேற்செலவுக்கு..! அந்த முள்ளுக் கட்டு - ஒரு நாள் விற்க முடியலை...  இல்லை வாங்கினவங்க காசு அன்னைக்கே தரலை... நோ ப்ராப்ளம்...! அன்னைக்கு சாம்பார் இருக்காது ...! சாதத்தை கஞ்சி ஆக்கி எப்பவுமே இருக்கும் கடாரங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட்டுக்க வேண்டியதுதான்..! இதுல அந்த வீட்டு குழந்தைகளுக்கு படிப்பு, புத்தகம் , யூனிபார்ம் - எடுக்கணும்னா...! கடன் வாங்கு--- ! கடன் யார் கொடுக்கப் போறாங்க ...? கூடப் பிறந்தவங்களே கொடுக்க மாட்டாங்க..! இன்னும் கடுமையா உழை..! ஒரு நாளைக்கு ரெண்டு முள்ளுக்கட்டு ..! வேற வழி...?

இதுலே, வாடிக்கை கஸ்டமர் எல்லாம் உண்டு.. ஒரு ஆளுக்கு நாலஞ்சு  பேர் கணக்கு..! முள்ளு காலி ஆக ஆக...திரும்ப அவங்க வாங்கிப்பாங்க... கடன் வசதி உண்டு..!

மழை, வெள்ளம் வந்து கண்மாய் நிறைஞ்சு போச்சா... ரெண்டு மூணு மாசத்துக்கு - வேலை இருக்காது..! அப்படிப்பட்ட கந்தக பூமில , மழை வேண்டாம்னு சாமி கும்பிடவும் , இந்த மாதிரி ஜனங்க இருக்கும். வீட்டுலே வேற , மழை தண்ணி சொட்டு அடிச்சு , அதுல சாக்கு போட்டு ...! புத்தகப் பை நனையாம அதை வேற இடத்துல வைச்சுக்கிட்டு...!

இந்த மாதிரி ஆளுங்க , எல்லா கிராமத்திலேயும் இருப்பாங்க...! ஊர்லே ஏதாவது கல்யாணம் சடங்கு விசேஷம்னா - சமையல் கான்ட்ரெக்ட் எல்லாம் கொடுக்க முடியாதவங்க வீட்டு ஆளுங்களே சமைப்பாங்க இல்லே..! அங்கே சமையலுக்கு  காய்கறி நறுக்க, பாத்திரம் விளக்க - இலை எடுக்க, சுத்தம் செய்ய - இந்த முள்ளுக்கு போற ஆளுங்க எல்லாம் அங்கே போயிடுவாங்க...! ஒரு நாள்...வேலை... ! காசும் பத்து ரூபாய் கிடைக்கும்...! அங்கே மீதம் ஆகுற சாம்பார் , பாயாசம் எல்லாம் - புள்ளைகளுக்கு, பேரன் பேத்திகளுக்கு கொண்டு போகலாம்...! ஒரு வாரத்துக்கு சாம்பார் - ப்ரிட்ஜ்லே வைச்சு , அட நீங்க வேறன்னா...! சுட வைச்சு , சுண்ட  வைச்சு , சுண்ட  வைச்சு  சாப்பிட்டுக்கலாம்...! சாம்பார் சுண்டி , சுண்டி ஊறுகாய் மாதிரி திக் ஆகிடும்..அப்புறம் தான் அதை நிப்பாட்டுறது..! சாம்பார் தான் இருக்குதே... முள்ளுக்கு போகாம இருப்பாங்களா... ம்ஹூம்ம்.. வாடிக்கை விட்டுப் போச்சுன்னா...? போகத்தான் செய்யனும்..!

சரி, இந்த வீட்டு ஆம்பளை ஆளு... என்ன பண்ணுவாங்க ..! அவங்களும் தீயா வேலை பார்ப்பாங்க.... எங்க ஊர் பக்கம் , தறி நெய்றது , பாவு சுத்துறது - பாவு பிணைக்கிறது - விழுது ஏத்துறது... இந்த மாதிரி நெசவு சம்பந்தப்பட்ட வேலை தான் அதிகம்..! அப்போ மெஷின் தறி கூட அவ்வளவா வரலை..! நாள் முழுக்க நின்னுக்கிட்டே தான் இருக்கணும்...! கால் எல்லாம் கெஞ்சும்..! அப்படியே பழகிட்டாங்க எல்லாருமே..! இல்லையா, மொட்டை வெயில்லே - பருத்தி எடுக்க, கடலை ஆய, இல்லை மில்லு வேலை...! தீப்பெட்டி ஆபீசு...!
ஜவுளிக்கடை வேலை..!

எதுக்கு சொல்ல வர்றேன்னா... ! ஊர் உலகத்துலே இந்த மாதிரி இருக்கிறவங்களும், இன்னும் நிறைய பேர் இருக்கிறாங்க...!

சரி, என்ன சார் - சம்பந்தமே இல்லாம... இதைப் பத்தி ...?

சொல்றேன்.. சொல்றேன்..! பொறுங்க பாஸு ..! எங்கே சுத்தி , எங்கேயோ வந்திட்டோம்... குரு மகாராஜ் பிறந்த நாள்.. நாலு நாள் சாப்பாடு ... அப்படியே கல்யாண வீட்டு மீத சாப்பாடுன்னு ...
=================================================

நான் ஏழாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தப்போ ஒருநாள், ஸ்கூல்ல CEO விசிட்......  CEO - Chief Educational Officer....டீச்சர் முந்தின நாளே எல்லோருக்கும் சொல்லி விட்டுட்டாங்க..! எல்லோரும் , நாளைக்கு கண்டிப்பா குளிச்சிட்டு , நல்லா துவைச்ச துணி தான் போட்டு வரணும்...! வர்றவர் பெரிய ஆபீசர்.  எப்படி , எப்படி கேள்வி கேட்பாங்க... என்ன பதில் சொல்லணும் எல்லாம்....! யாரும் சத்தம் போடக் கூடாது...! யாரை கேட்கிறாங்களோ ... அவங்க மட்டும் தான் பதில் சொல்லணும்...! என்ன..?

We should not eat more sweets..!

If you eat , what will happen...?

I will get stomach ache sir..!

ஸ்டமக் ன்னா வயிறு.... ! ஏக் ன்னா ? அப்படின்னா வலி டா.
வலிக்கு Pain தானே சொல்லணும்..! Ache சொன்னாலும் வலி தான். தலை வலிக்கு - ஹெட் பெயின் சொல்லக்கூடாது...! ஹெட் ஏக் தான்..! சரியா..?

நாங்க படிச்ச பள்ளிக்கூடத்துக்கு இந்த இங்கிலீஷே டூமச்.....
இங்கிலீஷா... நைன்த் , டென்த் ...நீ வாடி...! ஒரு பக்கத்துக்கு உள்ள எஸ்ஸே மனப்பாடம் பண்ணி எழுத வேண்டி வரும்...! பார்ப்போம்.. நீ என்ன பண்றேன்னு...? பத்தாங் கிளாஸ் பசங்க எல்லாம் பயமுறுத்திக்கிட்டே இருப்பாங்க..!

யே .... போடா ... நீயே எழுதும்போது நான் எழுத மாட்டேனா..! (அப்போ எல்லாம் சின்ன பசங்களும் , பெரிய பசங்களை வாடா , போடான்னு தான் பேசுவோம்..! இப்போ எல்லாம் அப்படி இல்லையோ..? )

மறுநாள் CEO வந்தார்...! இங்கிலீஷ் பாடம் நடந்தது...! ஆனா, அவரு ரொம்ப எல்லாம் பயமுறுத்தலை...! டீச்சர் கிட்டேயே தான் பேசிக்கிட்டு இருந்தாரு..! ரொம்ப பெரிய படிப்பு படிச்சு இருக்கீங்க...! இங்கே எப்படி , இந்த கிராமத்துலே..!

இது சொந்த ஊர் சார்... கொஞ்ச நாளைக்கு ஆக்டிங் டீச்சர்.. மெயின் டீச்சர் லீவுல இருக்கிறாங்க... நான் அடுத்த வருஷம் மெட்ராஸ் போயிடுவேன்..! வீட்டுக்காரர் Gulf ல இருந்து வந்திடுவாரு..! இப்படிதான் பேசினாங்கன்னு நினைக்கிறேன்... எங்க டீச்சர் மட்டும் என்ன சும்மாவா...! இங்கிலீஷ்ல சூப்பரா பேசினாங்க..!  அப்புறம் சரி , சம்பிராதாயத்துக்கு - பசங்க கிட்ட பேசணுமே..!

 இல்லைனா, அடுத்த வருஷம் வரும்போது, பசங்க பயப்பட மாட்டாங்களே.....?
(டேய் .... CEO வந்தா கேள்வி கேட்பாருடா...!)

"குட்...ஆல் தி பெஸ்ட் மேடம்" ன்னு சொல்லிட்டு , எங்க பக்கம் திரும்பினாரு..!

வாட் இஸ் யுவர் நேம்....? ஒரு பையனை பார்த்து கேட்டாரு...!
மை நேம் இஸ் ஜெயக்குமார் சார்..!
குட்..! வாட் யு ஹேட் பார் பிரேக் பாஸ்ட்...?
ஐ யேட் ரைஸ் சார் வித் சாம்பார் அண்ட் கர்ட் ...
வெரி குட் ... சிட் டௌன் ..!

டேய்... யாரும் பழைய சோறுன்னு சொல்லாதீங்க...! ஒன்னும் ஞாபகத்துக்கு வரலைன்னா ,  ஐ யேட் தோசா ... தோசை சொல்லக் கூடாது .. தோசா அவ்வளவுதான்... ஓகே..!

வெரி குட் டீச்சர்...! பசங்களுக்கு நல்லா பாடம் சொல்லி கொடுக்கிறீங்க..!

யார் , இங்கே HALF YEARLY ல பர்ஸ்ட் ரேங்க்...?

ஹி இஸ் தி ஒன் சார்...!
என்னை கூப்பிட்டாங்க..!
துவைச்ச, கசங்கின சட்டை.... மேல் பட்டனுக்கு பதிலா , ஊக்கு மாட்டி ..! நெத்தியில் பவுடர்ல பூசின ஒரு விபூதி மாதிரி கீத்து..! எண்ணை  தேச்சு , அழுத்தி வாரினாலும் - செம்பட்டை முடி..!  ( மாஸும் பச்சே மாதிரி  ...)

டீச்சருக்கு , ஒரு நிம்மதி - என்ன கேள்வி கேட்டாலும் இவன் பதில் சொல்லிடுவான்ப்பா..!

கம்.... கம்....!
வாட் இஸ் தி பெர்செண்டேஜ் யூ காட் இன் ஹால்ப்  யர்லி ?

ஐ ஹாவ் ஸ்கோர்ட் 96% சார்..!
குட்.... கீப் இட் அப்...!
வாட் ஸ் யுவர் எய்ம் இன் தி பியூச்சர்...!
ஐ வான்ட் டு பிக்கம் அன் IAS சார்...!
சூப்பர் தம்பி..! (டக்குன்னு தமிழ்...!) நல்லா படி..! படிக்கிறதை மனசுக்குள்ளே - உள் வாங்கி படி..! சும்மா மனப்பாடம் பண்ணாதே..! என்ன..?-
உன்னால முடியும்..!

எஸ் சார்...!

ஹி இஸ் ஆல்சோ குட் இன் ஜென்ரல் க்னாலெட்ஜ் சார்..! - இது எங்க டீச்சர்..!

மத்தப் பசங்களுக்கும் தான்....! மனப்பாடம் பண்றதுலே எந்த யூசும் இல்லை. அது மறந்துடும்..! புரிஞ்சு படிங்க..! புரியலைன்னா டீச்சர் கிட்ட , இந்த தம்பி மாதிரி நல்லா படிக்கிற பசங்க கிட்ட கேட்டுப் படிங்க..!

உங்க அப்பா, அம்மா என்ன பண்றாங்க தம்பி ...?

அப்பா - பாவு சுத்துவார்...சார்..!

வாட் இஸ் தட்..?              இது டீச்சரைப் பார்த்து..!
டீச்சர் சொன்னாங்க..! - தமிழ்ல தான். "இங்கே நெசவு சார். தறியில் மாட்டும்போது அதை சுத்தணும் .".. தமிழ்லே தான்னா நானே சொல்லிருப்பேனே..!

அம்மா..?
அம்மா..... ன்னு நான் கொஞ்சம் தயங்கினேன்..!
கொஞ்சம் லேசா கண் கலங்குச்சுன்னு நினைக்கிறேன்..!

அம்மா ஒருவேளை இல்லையோன்னு நினைச்சிடப் போறாரோன்னு - அப்பாவுக்கு உதவியா இருப்பாங்க சார்ன்னு சொன்னேன்...!
சரி, எல்லோரும் நல்லா படிங்கன்னு CEO கெளம்பிட்டாரு..!

அவரு கிளம்புனதும் - டீச்சர் பிடிச்சுக்கிட்டாங்க..!

என்னடா...? உங்க அம்மா என்ன வேலை செய்றாங்க...!
ஏன் சொல்ல வேண்டியதுதானே...!

டீச்சர் கிட்ட பொய் சொல்ல முடியாது...! அவங்களுக்கு நான் ரொம்ப ஸ்பெஷல் .... ! என் மேலே தனி அக்கறை.. முதல் நாளில் இருந்தே..!

சொல்லுடா..!

கண்ணுல கண்ணீர் தளும்ப ஆரம்பிச்சிடுச்சு  ... கீழே வழிய விடவும் முடியாது.. பசங்க எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கிறாங்க...! ஆக்சுவலா கூட படிக்கிற பசங்களுக்கே தெரியாது..!

முள்ளுக்கு போவாங்க டீச்சர்...!

அப்படின்னா...?

கண்ணீர் வந்தது  இந்த மாதிரி வேலைன்னு சொல்றதுக்கு  - வெட்கப்பட்டு இல்லை..!  தினம் அம்மா படுற வேதனையை நினைச்சதுனால வந்த வேதனை...!

குரல் கம்ம ,  நான்  சொல்லச்  சொல்ல , டீச்சருக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு..!

நல்லா படி .... என்ன ஆனாலும் சரி, இந்த படிப்பு உனக்கு பெரிய உதவியா இருக்கும்.பெரிய ஆளாகி, ரொம்ப நல்ல நிலைக்கு வருவே...! எந்த சூழ்நிலையிலும்,  உங்க அம்மாவை நல்லா பார்த்துக்கோ...!  அது கடவுளையே நீ கவனிச்சுக்கிடுறதுக்கு சமம்..!
கண்டிப்பா டீச்சர்...!
 இதோ ஓடிடுச்சு... அது நடந்து 25 வருஷம்..!

==================================================================

யம்மா... ! நீ ஏம்மா அவங்க வீட்டு கல்யாணத்துக்கு இலை எடுக்குறதுக்கு எல்லாம் போற...?

யையா... ராசு...! இதுல என்ன கண்ணு இருக்கு? அடுத்தவங்களை ஏய்ச்சு தான்யா பிழைக்க கூடாது...! முள்ளுக்கு போறதுக்கு இது பரவா இல்லை கண்ணு..!

ம்ஹூம்.....

அம்மாக்கு கையில முள்ளு அடிச்சிடுயா.... எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்கு முள்ளுக்கு போக முடியாது...!

அப்படியா...! அதை சொல்ல வேண்டியதுதானே... எருக்கலங் கள்ளி, சுண்ணாம்பு எதுனா எடுத்திட்டு வரவா..?

===================================================================
பூனேயில் வேலைக்கு சேர்ந்ததும் முதல் மாச சம்பளத்துலே எட்டு நூறு ரூபாய் அனுப்பிச்சு , "அப்பா, அம்மாவை இனிமேல் முள்ளு வெட்ட அனுப்ப வேண்டாம்.... நான் மாத மாதம் பணம் அனுப்புகிறேன்"னு லெட்டர் போட்டதுக்கு அப்புறம் தான்.... கொஞ்சூண்டு நிம்மதி...! லீவுல ஊருக்கு வந்தபோது - அம்மாக்கு தங்க தாலி வாங்கி , அப்பா கையில் கொடுத்தேன்...!  அம்மாவோட வாழ்க்கையில் முதல் தங்கம். அந்த நிமிஷங்கள் எல்லாம், சான்சே இல்லை...!

நான் பிறக்கும் முன்னே வரைக்கும் , வீட்டுல கொஞ்சம் வசதியாத் தான் இருந்து இருக்கிறாங்க... மாடு எல்லாம் வளர்த்துக்கிட்டு ...! அக்கா எல்லோரும் வளர்ந்தப்போ.... ஒரு கஷ்டமும் இல்லையாம்..! நான் பிறக்க கொஞ்ச நாள் முன்னே ஊர் முழுக்கவே கடும் வறட்சி..! வேலை இல்லை...! எங்க குடும்பத்துக்கு - சிரம தசை ஆரம்பிச்சு இருக்கு..! வாராது வந்த மாமணியா , முதல் மூணு பொம்பளை புள்ளைக்கு அப்புறம் - பதினைஞ்சு வருஷம் கழிச்சு - ஆண் வாரிசு...! இருந்தாலும் - வசதி தான் இல்லையே யொழிய , பாசத்துக்கு குறைச்சல் இல்லாம வளர்ந்தோம்..!  பத்து வயசுக்கு அப்புறம், நானும் லீவு நாள்ல அப்பாக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சேன்..! அப்போ நாங்க ரெண்டு பேரும் - பேசிக்கிட்ட விஷயங்கள் எல்லாம், எனக்கு உரமும், பதியமும்..! மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே ரேஞ்சுக்கு....

சரி, கிட்டத்தட்ட முப்பத்தொன்பது வருஷம் முடிஞ்சது....! எதையாவது சாதிச்சு இருக்கிறோமா..?

சம்பந்தமே இல்லாம , பாட்டு பின்னணியில் கேட்குது...
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் 
கடலும் கடலும் கை தட்டும் 
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்...
அடி அழகே , உலகழகே 
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்...!
- ரொம்ப ஓவரோ...! நிஜமாவே பாட்டு கேட்குதுப்பா ..! 

என்னோட நாலாங்கிளாஸ் வாத்தியார்  எனக்கு ரொம்ப உதவி பண்ணி இருக்கிறார்..! எங்க ஊர்ல இருந்த ஒரு பெரியவர் இங்கே சித்தூர் பக்கம் வந்து பெரிய ஜவுளிக்கடை எல்லாம் வைச்சு , பிரமாதமா வளர்ந்தவர்..! அவர் எங்க ஊருக்கு வந்தாலே, சார் என்னை அவரைப் பார்க்க கூட்டிட்டுப் போயிடுவார்...!  ஐயா, பையன் நல்லா படிக்கிற பையன், கிளாஸ் பர்ஸ்ட் ... கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா ....?  கிட்டத்தட்ட ஆறு வருஷம் - ஒவ்வொரு வருஷமும் , அவர் கொடுத்த பணம் தான் , எனக்கு - நோட்டுப் புத்தகம் வாங்க...! குடும்பத்துக்கு வரம் மாதிரி இருந்தது..! அன்னைக்கு அவர் செஞ்ச உதவிதான் - அந்த விதை தான்  இன்னைக்கு நான் இன்னும் கொஞ்சம் படிக்கிற பசங்களுக்கு உதவி பண்றது.... இது ஒரு செயின் ரீஆக்ஷன் ..!

சம்பந்தமே இல்லாத - மனிதம் மட்டும் இருந்ததால் எனக்கு உதவி பண்ணின அந்த நாலாங்கிளாஸ் வாத்தியார் , சித்தூர் ஜவுளிக்கடை பெரியவர்,  முழுசா பதினெட்டு வருஷம் ..! எனக்காக முள்ளு சுமந்து , சுமந்து - நமக்கும் வாழ்க்கை ஒருநாள் விடியும்னு  நம்பிக்கையோட - வளர்த்த அன்னை, என்னை தவிர உலகத்தில் எதையுமே பெருசா எண்ணாத என் தந்தை, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் - எப்படி இவங்களுக்கு நான் பட்ட கடனை தீர்க்க...?

என்னை விட இன்னும் நல்லவனா என் குழந்தைகளை வளர்த்தா, அது போதும்..!  எங்க அப்பா - அம்மாக்கு நான் இதைவிட வேற  என்ன கைம்மாறு செய்யப் போறேன்..? படிக்கிற ஏழை பசங்களுக்கு, கஷ்டப்படுறவங்களுக்கு  - முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணனும்..! அது போதும்..!

இன்னைக்கு - சிட்டில இருக்கிற ஒரு பெரிய ஜுவல்லரி ஷோ ரூம்...! அங்கே நடக்குற ஆண்டு விழா மாதிரி ஒரு பங்க்ஷனுக்கு , "சாரே, நீங்கள் அவசியம் குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைக்க வரணும்.... பத்து நிமிஷம் மதி"ன்னு , வீடு தேடி வந்து இன்வய்ட் பண்ணிட்டுப் போறாங்க...!

என்னோட அறிவோ , திறமையோ என்னை இந்த உயரத்துக்கு கூட்டி வந்ததுன்னு நினைக்கிறீங்களா? சத்தியமா இல்லை..! என்னை மாதிரி , என்னை விட திறமைசாலிகள் கோடிக் கணக்குல இருக்கிறாங்க..! இது அந்த இறையின் கருணை..!

இறை என்னை உயரத்தில் வைக்க பிரியப்பட்டது, நான் கற்றுக்கொண்ட சில விஷயங்கள் - இன்னும் சிலருக்கு வெளிச்சம் காட்டத்தான்னு நான் நினைக்கிறேன்..! சின்ன வயசுல பட்ட சிரமங்கள் எல்லாம், எனக்கு அவர் வைச்ச பரிசோதனைன்னு நினைக்கிறேன்..!

உயரம் போகும்போது - ஆட்டம் போடாதே...! ஆட்டம் போட்டால் , கீழே விழுந்தால் - அடி பலமாக விழும்..!

இவ்வளவு தூரம் - இந்த கட்டுரை எழுதின நேரத்துக்கு - நிஜமாவே ஒரு லட்ச ரூபாய் சம்பாதிச்சிடுவேன்...!  ரொம்ப ஓவரா பில்ட்-அப் பண்றேன்னு நெனைச்சிடாதீங்க...! உங்களில் சில பேருக்கு அது தெரியவும் செய்யும் ....!

என்னைக்காவது இந்த கட்டுரைகளை படிக்கும் யாரோ ஒருவருக்கு - என்னை மாதிரி ஒரு சூழ்நிலையில் வளர்ந்த ஒருத்தனாலேயே, இவ்வளவு சாதிக்க முடியும்னா, உங்களாலேயும் முடியும் என்கிற நம்பிக்கை விதை வாழ்க்கையில்  ஊன்றப்படும் !  அது, அந்த லட்ச ரூபாய் பணத்தை விட பெரியது !


என்னை பார்க்கும்போது , நிறைய நண்பர்கள் சொல்ற விஷயம்.. : "சார் - நீங்க ரொம்ப சிம்பிளா இருக்கிறீங்க...!
மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் படிச்சதுக்கு அப்புறம்,
"அண்ணே,  நீங்களே சொல்லுங்க... நான் ஹம்பிலா இல்லாம இருந்தால் தான் தப்பு...!

===========================================================

சரி, இன்னொரு முக்கியமான , உபயோகமான விஷயம் - மெயில் மூலம் கடந்த சில வருடங்களாக தொடர்பில் இருந்தவர்களுக்கு - இது ஏற்கனவே தெரிந்த விஷயம்...! தெரியாத வாசகர்களுக்காக..!

786 நம்பர் கொண்ட ரூபாய் நோட்டு  -

இது நம் வாசக நண்பர்களில் பெரும்பாலானோர் உணர்ந்து கொண்ட விஷயம்...! கண்டிப்பாக மேலே உள்ள லிங்கை க்ளிக் செய்து படித்துப் பாருங்கள்...!

சரி, இந்த பதிவும் நீண்டு விட்டது - இனி வரவிருக்கும் பதிவுகளில் இனியொரு விதி செய்வோம் - சிந்தனைகளை தொடருவோம்...!

பிரியமுடன்,

ரிஷி

30 comments:

 1. இவ்வளவு தூரம் - இந்த கட்டுரை எழுதின நேரத்துக்கு - நிஜமாவே ஒரு லட்ச ரூபாய் சம்பாதிச்சிடுவேன்...!
  Sir
  Neengal 1lac koduthalum intha unmai pathivirku eedagathu. En vittilum itha anubavam undu.
  Matram varum

  ReplyDelete
 2. Dear Rishi,

  Very good article.Iam in your next project after 5y33k i.e. jodhitam,temple visit etc pls add me in and give the I.D.No immediately.

  Regards,
  Raghu

  ReplyDelete
  Replies
  1. ஓ.... ID நம்பர் வேறே வேணுமாக்கும்...! ஏன் கண்ணு , இதைத் தான் கோயம்புத்தூர் குசும்புன்னு சொல்றாங்களாக்கும்..! ஹா...ஹா

   Delete
 3. வார்த்தைகள் இல்லை உங்கள் வாழ்க்கை பயணத்தை படித்த பிறகு.. பட்டை தீட்டிய வைரம் நீங்கள் இனி எப்போதும் மிலிற்வீற்கல் வாழ்க வளமுடன்....

  ReplyDelete
 4. நன்றி ரிஷி, படித்த போது சில இடங்களில் கண்கள் கலங்கின.

  ReplyDelete
 5. Great Rishi Ji..
  கொடிது கொடிது வறுமை கொடிது
  அதனினும் கொடிது இளமையில் வறுமை...
  Still with all odds against us we succeeded and our Humongous success is awaiting for us..

  Thanks to you and the DIVINE

  ReplyDelete
 6. Great sir
  Now I understand why do you helping others. We are grow with the same situation. Some tearful lines. Ok all are God's grace. Thanks

  ReplyDelete
 7. Really great sir,
  yaan kadanthu vantha padaiyum athuthan sir neengal pune varai vantheergal yaan 200 kmtrs munnokki sentrean. All the best (kuch paaneakeliye kuch konobhipadthahai) eazhuduvatharkku vaarthaigal illai. Mikka nandrihal pala nammai pertavargalukku.
  Thanks & Regards.
  M venugopal mumbai 400088.

  ReplyDelete
 8. கடுமையான, நேர்மையான கடந்து வந்த பாதை. மிகவும் பெருமையாய் இருக்கிறது ரிஷி.
  வாழ்க பல்லாண்டு உங்கள் பெற்றோர்.
  அனைவரையும் வாழவைக்கும் கோடை வள்ளலே! நன்றி

  ReplyDelete
 9. Dear Rishi..HIS blessings will always be there with you and your family

  ReplyDelete
 10. "நான் சின்ன வயசுல எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன தெரியுமா !? என் அளவுக்கு யாரும் கஷ்டப்பட்டிருக்க முடியாது!!!"----- இவ்வாறு நான் எண்ணியது,சொல்லியது எவ்வளவு அபத்தமானது. அந்த முகம் தெரியாத நாலாம் வகுப்பு வாத்தியார், ஜவுளிக்கடை பெரியவர் மற்றும் சுயநலமற்ற பெற்றோர்- இவர்களின் பொற்பாதங்களை நாங்கள் வணங்குகிறோம்.எங்களை ஆசீர்வதியுங்கள்.

  ReplyDelete
 11. Nandri. Ini varum ungalin entha muyarchikkum ungalludan kai korkka andha AANDAVAN arul puriyattum ( for all types of social services).

  ReplyDelete
 12. Rishi Sir,

  Excellent write up. It's so close to heart.

  Jothimani G

  ReplyDelete
 13. Dear Sir,

  Its really a heart touching and motivating post. It will be better this post available in there in our main blog livingextra site so that many will get benefitted after restricting the access to this site.

  With his blessing and grace finally I got one currency note after searching for more than a year bearing Number '780786' ( Only 6000 Less to get '786786' any how getting this note itself difficult). Let me see the Miracle and post it here shortly.

  ReplyDelete
 14. என் கடந்தகாலத்தை வாழ்ந்த மாதிரி இருந்தது இதை படித்தபொழுது. வாழ்த்துக்கள் ரிஷி

  ReplyDelete
 15. i also knows this pain. Always God will be with you.

  ReplyDelete
 16. Sir,

  While reading the article some places I have tearing eyes. Annamalai namma yellorayum oru point la meet panna vatchurukkar. There should be a reason. What is that, I really don't know.

  Hope you know that I got the mobile number which ends with 786. That also HIS call.
  Wanted to share an another incident with you about 786.

  Few days back, I got a 50 Rs note which ends with 786 from a tea shop guy, while got the change back after having a cup of tea. I used to have tea in that shop for last 7 years. Two days i kept the note with me in my purse. Yesterday, suddenly i handed over the 50 Rs note to him (May be HIS order) and explained him the power of 786 and requested him to keep the note in safe and don't loose it ever. He is very happy to know that and saved it. During that time I thought that I need to share the note with him as i got the note from him only.
  After giving the note i had a kind of feeling, Nothing in this world is equal to that feeling.
  Great.


  ReplyDelete
 17. Sir I am really thanks to your article which give very much confident about the life.

  ReplyDelete
 18. Rishi sir..How to react to touching life story in your life .. I have a tear on my eyes !!!!!! you have an again reminder to such a wonderful village life.
  Thank you so much for such a inspiration article .....

  நாம் ஜெயிக்கும் பயணத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நிறைய முட்டுக் கட்டைகள் வரும்... கூட இருக்கிறவங்களே உதவி பண்ணாம, நாம் கீழே விழுந்துட மாட்டோமா , கைகொட்டி சிரிக்கலாமேன்னு தான் பார்ப்பாங்க...! கடைசி வரைக்கும் காலை வாரி விட முயற்சி செஞ்சுக்கிட்டே இருப்பாங்க...! இதெல்லாம் அவங்களை விடக் கொஞ்சமா மேலே போறவரைக்கும் தான்...! இன்னும் அதிகமா உயரம் போகணும்...! ஒரு லெவெலுக்கு மேலே, அவங்க கிட்ட வர முடியாது....! 'சீ... இந்த பழம் புளிக்கும்' னு போய்டுவாங்க...!

  (என்னைக்காவது இந்த கட்டுரைகளை படிக்கும் யாரோ ஒருவருக்கு - என்னை மாதிரி ஒரு சூழ்நிலையில் வளர்ந்த ஒருத்தனாலேயே, இவ்வளவு சாதிக்க முடியும்னா, உங்களாலேயும் முடியும் என்கிற நம்பிக்கை விதை வாழ்க்கையில் ஊன்றப்படும் ! )

  ReplyDelete
 19. குருஜி, படித்து முடித்ததும் ஒரு பெரிய மௌனம்..... மெல்லிய விசும்பல் .... கண்ணீர் .......இறையிடம் வேண்டுதல்.......நல்ல orticle ன்னு சொல்லறத விட நீங்க நல்லா எழுதி இருக்கீங்க ... காரணம், வாழ்ந்தது நிஜம் அதனால எழுத்து நெஞ்ச தைக்குது.... எக்காலத்துக்கும் அந்த எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு துணையா இருக்க வேண்டிக்கறேன். கஷ்ட பட்டவன் பிறகு மூணு விதமா நடந்துப்பான்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஒன்னு, நாம பட்ட மாதிரியே படட்டும்....., ரெண்டு பாவம் மத்தவங்க கஷ்ட பட வேணாம்...... மூணு, கஷ்ட பட வேணாம்ன்னா, நம்ம என்ன பண்ணனும்.......நீங்க இதுலே, மூணாவது...... யாருக்கு தெரியுமோ இல்லியோ எனக்கு அனுபவமா தெரியும்.....காரணம் உங்களால நான் நிம்மதி மூச்சு விடுறேன் பொருளோடையும், அருளோடையும்.......இறைக்கு நன்றி.....

  ReplyDelete
 20. Dear Rishi Sir,
  Naan Kadathuvantha pathaiyai ninaivu padithiyathu Neengal menmalum valara iraivaninadam prathikiren

  ReplyDelete
 21. இறைவனைக் காண பயணித்துக் கொண்டிருக்கிறோம்,நல்ல வழிகாட்டல்.... Thanks a lot ji.

  ReplyDelete
 22. Dear sir,
  I got one 100 rs note. After two days i got a amount which has been given two years back.

  ReplyDelete

 23. Dear Rishi sir,
  I want to join with U and learn and live with your Guidance

  ReplyDelete